புதுச்சேரி பிரதேச வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பதில் தாமதம் செய்யப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.ஆர். முத்துராமன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் தலைமை தாங்கினார். இதில் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் வி.நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் எம்.கந்தசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மேலும் காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.