2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது, இந்தியப் பெண் ஒருவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் யூதக் குழந்தையை காப்பாற்றிய சம்பவம் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் கொலாபா பகுதியில் உள்ள சபாத் ஹவுஸும் ஒன்று. இதனை ராபி கேப்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஆகியோர் நிர்வகித்து வந்தனர். அவர்களுக்கு மோஷே என்ற இரண்டு வயது மகன் இருந்தார்.
தாக்குதலின்போது ராபி கேப்ரியல், ரிவ்கா உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில், அவர்களது மகன் மோஷே மட்டும் உயிர் தப்பினார். அப்போது அங்கு பணியாற்றிய இந்தியப் பெண் சாண்ட்ரா, துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் மற்றொரு ஊழியருடன் அறையில் பதுங்கியிருந்தார்.
பின்னர் மாடியில் குழந்தை மோஷே அழும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அங்கு சென்ற சாண்ட்ரா, பெற்றோரின் உடல்களுக்கு அருகில் இருந்த குழந்தையை துணிச்சலுடன் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். பயங்கரவாதிகள் அங்கு இருந்த நிலையிலும் அவர் குழந்தையை மீட்ட சம்பவம் பின்னர் பெரும் கவனத்தை பெற்றது.
பின்னர் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மோஷே, தனது தாத்தா-பாட்டியுடன் வளர்ந்து வருகிறார். குழந்தையை காப்பாற்றிய சாண்ட்ராவின் துணிச்சலை பாராட்டி இஸ்ரேல் தரப்பில் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும், அவருக்கு இஸ்ரேல் குடியுரிமை வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது கேப்டன் சுமித் மச்சாரின் வீரச் செயல் தொடர்பான செய்திகள் பரவிவரும் நிலையில், மும்பை தாக்குதலின்போது மோஷேவை சாண்ட்ரா காப்பாற்றிய சம்பவமும் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.