சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் நேரு, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
அமைச்சரை எந்த வகையிலும் தரக்குறைவாக பேசவில்லை என்றும், புதுச்சேரியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான பிரச்சினைகளில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே கேள்வி எழுப்பியதாகவும் நேரு தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், குற்றம் செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறினார்.
சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரை சந்தித்து சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் முறையாக பதிலளிக்காமல் சென்றதால் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டிய சூழல் ஏற்பட்டதாக நேரு விளக்கினார். பின்னர் அமைச்சரின் அறைக்குச் சென்று தனது கருத்தை தெரிவித்ததாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் தொடர்ந்து அமைதியாக பேசியதாகவும் கூறினார்.
மேலும், அமைச்சரை மிரட்டவோ அவமதிக்கவோ இல்லை என்றும், மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினராக கேள்வி எழுப்புவது தனது கடமை என்றும் நேரு தெரிவித்தார். கடந்த காலத்தில் அமைச்சருடன் நட்பாக பழகியதையும், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேருவுக்கு எதிராக மீனவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அமைச்சரை மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நேருவை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சரை அவமதிக்கவில்லை: எம்.எல்.ஏ. நேரு விளக்கம்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.