சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக 80ஸ் ரெட்ரோ விண்டேஜ் ஸ்டைல் AI புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களைத் திறந்தாலே 1980-களின் காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
திரைப்பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது 80ஸ் ஸ்டைல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 1980-களில் தான் எப்படி இருந்திருப்போம் என்ற ஆர்வமே இந்த டிரெண்ட் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்காக பிரத்யேக எடிட்டிங் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மார்ட்போன், AI செயலி மற்றும் சில வழிமுறைகள் இருந்தாலே புகைப்படங்களை எளிதாக உருவாக்க முடிகிறது.
ஆனால், இந்த வேடிக்கையான AI டிரெண்டின் பின்னணியில் சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் உருவாக்கும் AI புகைப்படங்கள் அனைத்தும் கிளவுட் டேட்டா சென்டர்களில் உள்ள கணினி சர்வர்கள் மூலம் செயலாக்கப்படுகின்றன.
லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் AI சேவைகளை பயன்படுத்தும்போது, சர்வர்களில் அதிக வெப்பம் உருவாகிறது. அவற்றை குளிர்விக்க கூலிங் டவர்கள் மற்றும் திரவக் குளிரூட்டல் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மறைமுகமாக அதிக அளவு தண்ணீரும் மின்சாரமும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சில கணிப்புகளின்படி, இந்தியாவில் உள்ள AI தரவு மையங்கள் குளிரூட்டும் தேவைகளுக்காக கடந்த ஆண்டில் சுமார் 15,000 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு AI புகைப்படத்தை உருவாக்குவதற்கு தோராயமாக 15 முதல் 60 மில்லி லிட்டர் தண்ணீர் மற்றும் கணிசமான மின்சாரம் மறைமுகமாக செலவாகலாம் என கூறப்படுகிறது.
உலகளவில் 80ஸ் AI புகைப்படங்கள் பல மில்லியன் அளவில் வைரலாகி வரும் நிலையில், இதன் நீர் மற்றும் மின்சார பயன்பாடு குறித்த விவாதமும் தீவிரமடைந்துள்ளது. டிரெண்டாக உருவாக்கப்படும் ஒரு சாதாரண AI புகைப்படத்தின் பின்னணியிலும் இயற்கை வளங்களின் நுகர்வு இருப்பதை உணர்த்தும் வகையில் இந்த தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
80ஸ் AI போட்டோ டிரெண்ட்: பின்னணியில் தண்ணீர் அதிர்ச்சி
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.