ப்ரீபெய்டு மொபைல் பயனர்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் பாதுகாப்பை வழங்கும் வகையில், தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளில் 13-வது திருத்தத்தை டிராய் வெளியிட்டுள்ளது.
இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு 28 நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் பேக்குகளுக்கு மாற்றாக, 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலாவதி கொண்ட பேக்குகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதனால் ஒரு ஆண்டில் 13 முறை ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக 12 முறை ரீசார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும்.
மேலும், டேட்டா சேவை தேவையில்லாத மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் மொபைல் பயன்படுத்துபவர்களுக்காக, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் மட்டும் கொண்ட சிறப்பு பேக்குகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் தானாக புதுப்பிக்கக்கூடிய சிறப்புக் கட்டண வவுச்சர்கள், குறுகிய காலாவதி கொண்ட அதிக எண்ணிக்கையிலான பேக்குகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் எஸ்எம்எஸ் திட்டங்களையும் வழங்க வேண்டும் என டிராய் அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை பாஜக ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தா வரவேற்றுள்ளார். கடந்த மார்ச் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய அவர், 28 நாள் ரீசார்ஜ் திட்டங்களால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், டேட்டா தேவையில்லாத பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அழைப்பு சார்ந்த திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.