நடிகர் அஜித்தின் கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கிளாடியேட்டர்ஸ்’ திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஆவணப்படம் மற்றும் டாக்கு டிராமா பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் டிரைலர் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன்–மிச்செலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தில் பங்கேற்றார். அங்கு அஜித் கலந்து கொண்ட போட்டியை நேரில் பார்வையிட்ட விஜய், போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டி முடிந்த பின்னர் ரேஸ் உடையில் இருந்த விஜய், அஜித்துடன் இணைந்து இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
இந்த நிலையில், அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு வலுசேர்க்கும் வகையில், படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், விஜய்–அஜித் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “இரு பெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியது மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், தனது பதிவில் #Gladiators என்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். இதனால், ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில் முதல்வர் விஜய் இடம்பெறுவது குறித்த தகவல் மேலும் கவனம் பெற்றுள்ளது.
கிளாடியேட்டர்ஸில் முதல்வர் விஜய்? உறுதியான தகவல்!
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.