இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே இந்திய அணியே ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கிறது.
இந்நிலையில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, தொடை தசையில் ஏற்பட்ட புதிய காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 27 வயதான யாஷ் தாகூர், விதர்பா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர், 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் 50 போட்டிகளில் 81 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள யாஷ் தாகூர், சமீபத்திய துலீப் டிராபி அரையிறுதியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்தார்.
இந்திய அணிக்கு ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாகவும், திலக் வர்மா துணைக் கேப்டனாகவும் செயல்படுகின்றனர். அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, பும்ரா, அர்ஷ்தீப் சிங், யாஷ் தாகூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு காரணமாக செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவிருந்த முதல் டி20 போட்டியை மாற்ற வேண்டும் என டெல்லி போக்குவரத்து போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். போட்டிக்கு 25,000 முதல் 35,000 ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் போக்குவரத்து ஏற்பாடுகளில் சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கம், போக்குவரத்து போலீசாருடன் ஆலோசனை நடத்திய பின்னர் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே முதல் டி20 போட்டி செப்டம்பர் 13-ம் தேதி திட்டமிட்டபடியே நடைபெறும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய வீரர்கள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் புதுவரவு யாஷ் தாகூர் ஆகியோர் பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சியை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கண்காணித்தார்.
உடற்தகுதி பெற்ற பும்ரா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இன்று பயிற்சியை தொடங்க உள்ளனர். துலீப் டிராபியில் விளையாடி வரும் இஷான் கிஷான், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் திலக் வர்மா பயிற்சியில் பங்கேற்கவில்லை.
மேலும், தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மார்கலுக்கு விசா தொடர்பான சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் இந்தியா திரும்பக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்கள் தொடர்ந்து காயமடையும் சூழலில், அணியின் பிசியோதெரபிஸ்ட் கம்லேஷ் ஜெயினை மாற்றவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கன் தொடரில் பும்ரா ரீ-என்ட்ரி!
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.