இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் சரிகம நிறுவனத்துக்கு இடையேயான காப்புரிமை தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தயாரிப்பாளர்களிடம் இருந்து 134 திரைப்படங்களின் பாடல்களுக்கான உரிமையை சரிகம நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களின் உரிமையை இளையராஜா கோரவோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை நீக்கக் கோரி இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இளையராஜா தொடர்ந்து தனது பாடல்களின் உரிமையை கோரி வருவதாக சரிகம நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மீறியதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறப்படும் நடவடிக்கைகளுக்காக இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை தங்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் சரிகம தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இளையராஜா தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே, 2026 பிப்ரவரி மாதம் நடைபெற்ற மற்றொரு வழக்கில், சரிகம நிறுவனம் தனது பதிப்புரிமை கொண்டதாகக் கூறும் திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவுகளை அனுமதியின்றி பயன்படுத்துவதாகக் கூறி இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில், உரிமை தொடர்பான விவகாரத்தை நீதிமன்றம் விரிவாக பரிசீலித்திருந்தது.
இளையராஜா – சரிகம இடையேயான காப்புரிமை விவகாரம் தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வாதங்கள் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது புகார்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.