ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர கிராமம் ஒன்றில் கோவில் திருவிழாவை முன்னிட்டு காலங்காலமாக நடைபெற்று வரும் பாய்மரப் படகு போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘மண்டாடி’. சூரியும், சுகாசும் எதிரெதிர் அணிகளாக களமிறங்கும் இந்தப் போட்டி, நண்பர்களாக இருந்த இருவருக்குள் ஏற்பட்ட பிரிவுக்கும் பகைக்கும் காரணமாகிறது.
நண்பர்களாக இருந்த சூரியும் சுகாசும் ஏன் பிரிந்தார்கள்? 20 ஆண்டுகளாக ஊரை விட்டு விலகி சென்னையில் வாழ்ந்த சூரி மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியது ஏன்? பாய்மரப் படகு போட்டியைச் சுற்றி உருவாகும் மோதல்கள், உள்குத்துகள் மற்றும் பகை எங்கு செல்கிறது? இறுதியில் போட்டியில் வெல்வது யார்? என்பதே படத்தின் கதை.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தின் முக்கிய சிறப்பு, தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத பாய்மரப் படகு போட்டியை கதையின் மையமாகக் கொண்டிருப்பதுதான்.
கடலில் பாய்மரம் கட்டிய சிறிய படகில் 6 பேர் இணைந்து குறிப்பிட்ட எல்லையைச் சுற்றி வர வேண்டும். பாய்மரத்தை இயக்கும் திறன் மட்டுமின்றி, காற்று மற்றும் கடலின் தன்மையை அறிந்து உடல் மற்றும் மன வலிமையுடன் போட்டியிடும் இந்த பாரம்பரிய விளையாட்டை மையமாக வைத்து காதல், நட்பு, வீரம், தியாகம், பாசம் என பல உணர்வுகளை இயக்குநர் இணைத்துள்ளார்.
சூரியின் மாறுபட்ட நடிப்பு
சென்னை பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம் மற்றும் நீர் விளையாட்டுப் பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றும் சூரி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்ரோஷத்துடன் சொந்த ஊர் திரும்புவதிலிருந்து கதை வேகம் பெறுகிறது.
ஊரில் படகு நிறுவனம் நடத்தும் தாதாவாகவும், சூரியின் முன்னாள் நண்பராகவும் இருக்கும் சுகாசுடன் அவர் மோதத் தொடங்கியதும் திரைக்கதை விறுவிறுப்படைகிறது.
தாடியுடன், ஒல்லியான நடுத்தர வயது தோற்றத்தில் வரும் சூரியின் கதாபாத்திரத்தை இயக்குநர் அழுத்தமாக வடிவமைத்துள்ளார். அந்த கதாபாத்திரத்தின் கோபம், பாய்மரப் போட்டியின் மீதான காதல் மற்றும் போட்டியைத் தடுக்க வரும் வில்லன் தரப்பினருடன் ஏற்படும் மோதல்கள் ஆகியவற்றில் சூரி சிறப்பாக நடித்துள்ளார்.
குறிப்பாக, வழக்கமாக பார்க்கும் சூரியின் உடல் மொழியோ, காமெடி சாயலோ இந்தப் படத்தில் பெரிதாக வெளிப்படவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையான தோற்றத்திலும் வருகிறார்.
படத்தின் நீண்ட கிளைமாக்ஸ் பாய்மரப் போட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது. நடுக்கடலில் தனது அணியுடன் வெற்றி பெற சூரி போராடுவது, அதில் ஏற்படும் சிக்கல்கள், தாக்குதல்கள் மற்றும் இயற்கை சீற்றங்களை சமாளிப்பது போன்ற காட்சிகளில் சூரியின் நடிப்பு கவனம் பெறுகிறது.
இது சூரியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமையக்கூடிய ஒன்று. இருப்பினும் டப்பிங் மற்றும் சில எமோஷனல் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
வில்லனாக மிரட்டும் சுகாஸ்
வில்லனாக வரும் சுகாஸ், பல இடங்களில் “யாருப்பா இது?” என கேட்க வைக்கும் அளவுக்கு கவனம் ஈர்க்கிறார். கோபத்திலும் வேகத்திலும் அவர் பேசும் விதமும், சண்டைக் காட்சிகளில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமும் சிறப்பாக அமைந்துள்ளன. கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வாக தெரிகிறார்.
ஹீரோயினாக வரும் மகிமா நம்பியார், சற்று வயதான தோற்றத்தில் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதுடன், தனது நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார். அவர் சூரியை காதலிக்கிறார். ஆனால் சூரிக்கு ஜோடி இல்லை என்ற விதத்தில் திரைக்கதையிலும் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது.
மகிமாவின் கோபக் காட்சிகள், திருவிழாவில் ஆடும் காட்சி மற்றும் தனது மகனிடம் காதல் குறித்து பேசும் காட்சி ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளன.
பாய்மரப் போட்டியின் ஜாம்பவானாக சத்யராஜ் நடித்துள்ளார். அவரது கெட்டப் வித்தியாசமாக இருந்தாலும், நடிப்பில் புதுமையான மாற்றம் பெரிதாக இல்லை. அவர் பாய்மரம் செலுத்தும் காட்சிகளும் குறைவாகவே இடம்பெற்றுள்ளன.
சூரியின் நண்பராக வரும் பால சரவணன், வில்லனின் தந்தை கதாபாத்திரத்தில் வரும் ரவீந்திர விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் மனதில் நிற்கிறார்கள்.
ஊர்த்தலைவர், ஸ்டண்ட் சிவா, ஊர் மக்கள், பாய்மரப் போட்டியில் பங்கேற்கும் இளைஞர்கள் என படத்தில் இடம்பெறும் துணைக் கதாபாத்திரங்களிடமும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியுள்ளார். இன்னொரு காதல் கதையும் க்யூட்டாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் பலம்
சூரி ஹீரோ என்றால் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் ஆகியோரும் படத்தின் மற்ற ஹீரோக்களாக தெரிகிறார்கள்.
பாய்மரப் படகு போட்டி, கடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளில் இவர்களின் கடின உழைப்பு தெளிவாக தெரிகிறது.
ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். பாடல்கள் ஓகே. இருப்பினும் போட்டிக் காட்சிகளுக்கு தனித்துவமான இசையையோ, கடலை மையப்படுத்திய பிரத்யேக பின்னணி இசையையோ இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம். அது படத்தில் சற்று மிஸ்சிங்.
திரைக்கதையில் சில குறைகள்
போட்டி, நட்பு, காதல், துரோகம், பழிவாங்கல் ஆகியவற்றைச் சுற்றியே கதை பயணிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு சில இடங்களில் திரைக்கதை சற்று தொய்வடைகிறது. ஆனால் கிளைமாக்ஸ் நெருங்கும்போது மீண்டும் வேகம் பிடிக்கிறது.
சூரி அணிதான் இறுதியில் வெற்றி பெறப்போகிறது என்ற உணர்வு, கிளைமாக்ஸுக்கு முன்பே பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தப்படுவது படத்தின் ஒரு மைனஸாக உள்ளது.
சத்யராஜ் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் கோவில் திருவிழா காட்சிகளில் இன்னும் கூடுதல் கமர்ஷியல் அம்சங்களைச் சேர்த்திருக்கலாம்.
கடல் சார்ந்த கதைகள், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பின்னணியிலான படங்களை விரும்புபவர்களுக்கு ‘மண்டாடி’ பிடிக்கும்.
இளைஞர்களை கவரும் அம்சங்கள் சற்று குறைவு. ஓவர் எமோஷன் மற்றும் துரோகம் போன்ற விஷயங்கள் ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை என்றாலும், பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்ட புதுமையான கதைக்களம், மிரட்டலான மேக்கிங், நடிகர்களின் உழைப்பு, ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் மற்றும் குறிப்பாக கடலில் நடைபெறும் பாய்மரப் போட்டி காட்சிகளுக்காக ‘மண்டாடி’யை ரசிக்கலாம்.
மண்டாடி – புதுமையான களம்... மிரட்டலான கடல் போட்டி!
மண்டாடி – திரைப்பட விமர்சனம்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.