திருச்சி கருமண்டபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் சிவக்குமார் இல்லத் திருமண விழாவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜயின் லண்டன் பயணம் மற்றும் தவெக ஆட்சி குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும், வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி தவெக என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் விலை பேசி ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம்சாட்டினார். தவெக ஆட்சி சொந்தக்காலில் நிற்கவில்லை என்றும், இரவல் காலில் தான் நிற்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, தவெக ஆட்சி நிலையானது அல்ல என்றும், மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றாத மோசமான ஆட்சியாகவே பார்க்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நெல்மணிகளை முறையாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியபோது முதல்வர் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
விஜயின் லண்டன் பயணத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.