80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே ஏஆர்எஸ் கார்டன் சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ராதா அளித்த புகாரில், தனது வீட்டில் இருந்த காசோலையை திருடி அம்பிகா மற்றும் தம்பி மல்லிகார்ஜூன் குஞ்சன் நாயர் ஆகியோர் ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக அம்பிகாவை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும், தனது வீட்டிற்குள் கூட செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் ராதா தெரிவித்திருந்தார்.
இதற்கு ஏற்கனவே பதிலளித்திருந்த அம்பிகா, ஏஆர்எஸ் கார்டன் சொத்தில் 50 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாகவும், ஸ்டூடியோவில் தனக்கு மூன்றில் ஒரு பங்கு உரிமை இருப்பதாகவும் கூறியிருந்தார். நிலம், தங்க நகை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விஷயங்களை மறைத்து ராதா நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்பிகா, ஏஆர்எஸ் கார்டன் உருவாக முக்கிய காரணம் தான்தான் என்றும், அது தனது உழைப்பால் உருவானது என்றும் தெரிவித்தார். மேலும், ஏஆர்எஸ் கார்டன் சொத்தில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தன்னிடம் ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
தங்க நகைகள் தொடர்பாகவும் பேசிய அம்பிகா, தனது பெயரில் இருந்த தங்கத்தையும் ராதா வைத்திருப்பதாக தெரிவித்தார். சொத்து பிரச்சினையை தீர்ப்பதற்காக ராதா காசோலை வழங்கியதாகவும், பின்னர் அதை நீக்கியதாகவும் அவர் கூறினார். அந்த காசோலை பவுன்ஸ் ஆனதால் ஏற்பட்ட பண இழப்பு தனக்கே ஏற்பட்டதாகவும் அம்பிகா தெரிவித்தார்.
மேலும், ராதா தங்களுக்கு ரூ.97 கோடி வழங்க வேண்டியிருப்பதாகவும், ஆனால் தன் மீது ரூ.46 கோடி மோசடி புகார் அளித்திருப்பது வேதனை அளிப்பதாகவும் அம்பிகா கூறினார். குடும்ப விவகாரம் என்பதால் பிரச்சினை வெளியில் தெரியக்கூடாது என தான் நினைத்ததாகவும், தற்போது சமரசமாக பேசுவதற்கான வாய்ப்பு இருந்தால் பேசத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தன்னை திருடன் என கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறிய அம்பிகா, இதனால் கண்கலங்கியபடி செய்தியாளர்களிடம் பேசினார்.
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.