வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை, அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு இடையேயான பாரபட்சமான நடவடிக்கைகளில் மாற்றம், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 11-ம் தேதி முதல்கட்ட வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது.
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குவது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகளுக்கான செயல்திறன் ஊக்கத்தொகை திட்டத்தில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக அரசுடன் பேசி தீர்வு காணவும், பிற கோரிக்கைகள் குறித்தும் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட போராட்ட நடவடிக்கைகள் மற்றும் 3 நாள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.
மூன்று நாள் வங்கி ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.