மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன், தனக்கு இதுவரை அரசு உதவித்தொகை வழங்கப்படவில்லை என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாணவர் பாரதிதாசன் கேட்பது உதவி அல்ல என்றும், அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்ட உரிமையைதான் அவர் கேட்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அரசு நிதி வழங்க முடியாது என அறிவித்தால், திமுகவும் மக்களும் இணைந்து அவரது கல்விக் கட்டணத்தை செலுத்தி படிக்க வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேபோல், சமூகநீதி நாளில் இதுபோன்ற சமூக அநீதியை அரங்கேற்றும் அரசை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சமூகநீதித்துறை சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாணவர் வெளியிட்ட காணொளியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருப்பதாகவும் துறை தெரிவித்துள்ளது.
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு கல்வி நிறுவன கட்டணம், வெளிநாட்டு வாழ்க்கை செலவு மற்றும் இதர செலவுகள் என ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவர் பாரதிதாசனுக்கு 2025-2026ஆம் கல்வியாண்டில் அவரது PhD படிப்புக்காக மொத்தம் ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கல்வியாண்டான 2026-2027க்காக, மாணவர் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.5.57 லட்சம் கல்விக் கட்டணம் பல்கலைக்கழக வங்கிக் கணக்கிற்கும், வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 லட்சம் மாணவரது வங்கிக் கணக்கிற்கும் என மொத்தம் ரூ.12 லட்சம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக சமூகநீதித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 லட்சம் (RM 83,300) வழங்க வேண்டும் என மாணவர் கோரியுள்ளதாகவும், அவர் சமர்ப்பித்த உத்தேச செலவினப் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளர் இதுவரை பரிந்துரைக்கவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முதல் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக மாணவர் சமர்ப்பித்த ஆவணங்களில் ரூ.8,17,962 மதிப்பிலான பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை எனவும், ஆராய்ச்சிக்காக வாங்கிய பொருட்கள் மற்றும் அவற்றுக்கான பணம் செலுத்தியதற்கான ஆவணங்கள் குறித்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினமாக கோரப்பட்டுள்ள ரூ.19.50 லட்சம் தொடர்பாக, மாணவர் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சி பொருட்கள் மற்றும் செலவினங்கள் அவரது ஆராய்ச்சிக்கு தேவையானவை என்பதை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு, செப்டம்பர் 17ஆம் தேதி மதியம் 1.01 மணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து National University of Malaysia-வுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்தவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்றும் மாணவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறை கூறியுள்ளது.
மேலும், 2025-26ஆம் ஆண்டில் சமூகநீதி துறையின் கல்வி உதவித்தொகை பெற்று தற்போது பல்வேறு நாடுகளில் பயின்று வரும் 181 மாணவர்களில், பாரதிதாசனைத் தவிர வேறு எந்த மாணவரிடமிருந்தும் உதவித்தொகை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என்ற புகார் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை திட்டங்கள் உரிய ஆவணங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மாணவர் வெளியிட்ட காணொளியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் திட்டத்தின் செயல்பாடு குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் சமூகநீதித்துறை தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மாணவர் உதவித்தொகை விவகாரம்: அரசு விளக்கம்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.