தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் அரசை விமர்சித்து வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்வர் விஜய் இன்று செப்டம்பர் 23-ம் தேதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி, மின் தேவை உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். மேலும், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்வாரிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தமிழகத்தில் 600 துணை மின் நிலையங்களை உருவாக்க வேண்டியுள்ளதாகவும், இதுதொடர்பான பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வு நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், சுமார் 6 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நீண்ட காலமாக சீரமைக்கப்படாத டிரான்ஸ்பார்மர்களால் அதிக மின் சுமையை தாங்க முடியாமல் பழுதுகள் ஏற்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
தேர்தல் காரணமாக பராமரிப்பு பணிகள் தள்ளிப்போனதால் தற்போது சில இடங்களில் பழுதுகள் ஏற்படுவதாகவும், மின்தடை பிரச்சினையை சீரமைக்க பொதுமக்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கேட்டுக்கொண்டார்.
மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான துணை மின் நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.