உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் சைவம் மற்றும் அசைவத்தை அடையாளம் காண பச்சை மற்றும் சிவப்பு நிற குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்ற நடைமுறையை சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களிலும் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக சட்ட அளவியல் (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ல் திருத்தம் செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
புதிய விதிகளின்படி, முழுமையாக சைவ முறையில் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களில் பச்சை நிற புள்ளி குறியீடாக இடம்பெற வேண்டும். அதேபோல், விலங்கு கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அசைவத்தை குறிக்கும் வகையில் சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளி அச்சிட வேண்டும்.
இந்த குறியீடு பொருளின் பேக்கிங் அட்டையின் மேல்புறத்தில், நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியும் வகையில் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை வாங்கும்போது, அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் தன்மையை நுகர்வோர் எளிதாக அறிந்து, தங்களுக்கு ஏற்ற பொருட்களை தேர்வு செய்ய முடியும்.
சோப்பு, ஷாம்பூவிலும் சைவம் அசைவம் குறியீடு
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.