சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்படும் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் பேசிய அவர், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெய்நிகர் வரிசை முறையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகளுடன் கேரள போலீசார் ஆலோசனை நடத்த உள்ளனர். பக்தர்களிடம் போலீசார் நட்புடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர தேவைகளை சமாளிக்க விரைவு அதிரடிப்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பார்கள். முக்கிய வழித்தடங்களில் தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படும்.
மேலும், நிலக்கல் மற்றும் ஜக்குபள்ளம் பகுதிகளில் ஒரே நேரத்தில் 400 முதல் 500 வாகனங்கள் வரை நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் விவரங்களும் போலீசார் மூலம் சரிபார்க்கப்பட உள்ளன. மேலும், பம்பை ஆற்றில் துணிகளை விட்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சபரிமலை பக்தர்களுக்கு விரிவான போலீஸ் பாதுகாப்பு
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.