தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 12-ம் தேதி தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஆ.ராசா பேசிய சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அவரது பேச்சுக்கு மாற்றுக் கட்சியினர் மட்டுமின்றி, தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த ஆ.ராசா, உணர்ச்சி உந்துதலில் சில வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், தனது வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்த அவர், “நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகியுள்ள நிலையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, எவ்வித கூடுதல் விளக்கமும் அளிக்காமல் தனது எக்ஸ் பக்கத்தில் திருக்குறள் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
“யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
என்ற திருக்குறளை அவர் பதிவிட்டிருப்பது, ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
ஆ.ராசாவுக்கு திருக்குறள் மூலம் கனிமொழி அறிவுரை
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.