புதுடில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் தொழில்மன்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் 40 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உலக நாடுகளுக்கு இடையே வர்த்தக தடைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா பொருளாதார ரீதியிலான புதிய பாலங்களை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வணிகத்திற்கான தடைகளை குறைத்து, இந்திய நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கம் என பிரதமர் கூறினார்.
பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார். 2006-ம் ஆண்டு 4 நாடுகளுடன் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு தற்போது 21 நாடுகளை கொண்டதாக விரிவடைந்துள்ளது என்றும், உலக மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் இந்த அமைப்பைச் சேர்ந்த நாடுகளில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 40 சதவீதமாகவும், உலக வர்த்தகத்தில் 25 சதவீதமாகவும் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். உலக பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் சாலை, ரயில்வே, துறைமுகம் மற்றும் விமான நிலைய கட்டமைப்புகள் வேகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், கப்பல் கட்டுமானம், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் புதிய திறன்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், விவசாயம், சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் ஸ்மார்ட் கிரிட் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் புதிய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உலகளாவிய வர்த்தக வளர்ச்சிக்கு பாதுகாப்பான கடல் வழித்தடங்களும், தடையற்ற விநியோகச் சங்கிலிகளும் அவசியம் எனக் குறிப்பிட்ட பிரதமர், கடல் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பிரிக்ஸ் பெண்கள் வணிக கூட்டமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பெண் தொழில்முனைவோர் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
40 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.