புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் GNS ராஜசேகரன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது ஓட்டப்பந்தய டிராக் மற்றும் கால்பந்து மைதானப் பகுதிகளில் வளர்ந்துள்ள புதர்களை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பான சூழலில் பயிற்சி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தை பார்வையிட்ட அமைச்சர், அங்கு விளையாட்டு வீரர்கள் தங்கும் இடம், கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். வீரர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மேலும், புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஹாக்கி மைதானத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் GNS ராஜசேகரன் அறிவுறுத்தினார்.
மைதான விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார். மைதானம் முழுவதும் உள்ள புதர்களை அகற்றி, விளையாட்டு வீரர்கள் எந்தவித அச்சமுமின்றி பாதுகாப்பாக பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்திரா காந்தி மைதானத்தில் அமைச்சர் GNS ராஜசேகரன் ஆய்வு